Thursday, February 25, 2010

பலாபட்டறை ஷங்கரின் Judjement day

 

 நானும் என் மனைவியும் இருபது வருடம் சந்தோசமாக இருந்தோம். பின்பு நாங்கள் சந்தித்து கொண்டோம். திருமணத்தை பற்றி நகைச்சுவையாக சொல்லும் வாசகம் அது. 
பத்து வருடங்களுக்கு முன்பு சந்தோசமாக இருந்த ஒரு பெண், ஷங்கரை முதன் முதலாக சந்தித்து மணம்முடித்த நாள் நாளை (26-2-20 ?? ). 

ஷங்கர்,பிரபல பதிவர், கூடிய சீக்கிரம் மற்ற ரவுடி பதிவர்களுடன் ஜீப்பில் ஏற இருக்கும் திறமை படைத்தவர். அவரை இந்த நல்ல நாளில் வாழ்த்துவதோடு இந்த பத்து வருட காலம் அவருடைய மொக்கைகளை அவருடைய அழிச்சாட்டியங்களை தாங்கி, மிக பொறுமையாய் இருந்து அவருடன் வாழ்ந்து வரும் திருமதி ஷங்கருக்கு "கோல்டன் க்ளோப்" விருது வழங்க இந்த அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்கிறேன்.

வாழ்த்த வயதில்லை என்றாலும்  மனம் இருக்கின்ற  காரணத்தால் வாழ்க தம்பதியினர். வாழ்க வளமுடன்.

பின்குறிப்பு:-
புகைப்படம் ஷங்கரின் இணைய தளத்தில் இருந்து திருடப்பட்டது.இல்லற வாழ்கையில், இந்த பத்து ஆண்டுகளில் ஞானம் அடைந்துவிட்டதால் அதை கொண்டாடும் விதத்தில் நாளை ஷங்கர் பார்ட்டி அளிக்கிறார். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அவரை தொடர்பு கொள்ளவும்.







Tuesday, February 23, 2010

சின்ன சின்ன - 23-2-10

பதிவு போட்டு ரெண்டு வாரம் ஆச்சு. ஏன் இன்னும் பதிவு போடலைன்னு நேரிலும், தொலைபேசியிலும், மெயிலிலும்,எஸ் எம் எசிலும், கடிதம் எழுதியும் (எத்தனை!) கேட்ட பதிவுலக நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு என்ன கைம்மாறு செய்யபோகிறேன் என்றே தெரியவில்லை. நீங்கள் உங்கள் படைப்பை புத்தகமாக வெளியிடும் போது கண்டிப்பாக ஒரு புத்தகம் வாங்குவேன் என்று உறுதி கூறுகிறேன்.

 *************************************************************************
Food inc. பதிவர்கள் மயில் ராகவன், ஷங்கர் புண்ணியத்தில் இந்த படத்தை பார்க்க முடிந்தது. உணவு தயாரிப்பை பெரிய நிறுவனங்கள் எப்படி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்பதையும் நாம் உண்ணும் உணவு (குறிப்பாக இறைச்சி உணவுகள்) எவ்வாறு தயாரிக்கபடுகிறது என்ற கசப்பான உண்மையையும்  வெளிச்சம் போட்டு காட்டும் இந்த படம். ஏற்கனவே ஹாலிவுட் பாலாவும் மயில் ராவணனும் இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதி விட்டார்கள். அதையும் படித்து பாருங்கள்.
நமது பதிவுலகத்தில் FOOD என்று ஒரு பதிவர் இருக்கிறார். திருநெல்வேலியில் உணவு ஆய்வாளராக பணி ஆற்றும் இவர் உணவு கலப்படங்களை பற்றி நிறைய பதிவிட்டு இருக்கிறார். "அ"வில்  ஆரம்பித்து "டோ" வில் முடியும் ஒரு சமையல் பொடி. எல்லா உணவிலும் சுவைக்காக சேர்க்க சொல்லி விளம்பரம் பார்த்து இருப்பீர்கள். அதன் கெடுதலை சொல்லும் இந்த பதிவு. கொஞ்சம் வோட்டும் போட்டு உங்க ஆதரவை தெரிவியுங்கள்.

*************************************************************************
பதிவர்களுக்கு படைப்புகளுடன் வெள்ளிநிலா பத்திரிகை முதல் பதிப்பு வெளிவந்தது. அதில் அநேக பதிவர்களின் படைப்புகள் இருந்தாலும், ஈரோடு கதிர், யுவக்ருஷ்ணா மற்றும் நம்ம ஷங்கரின் படைப்புகள் குறிப்பிடபடவேண்டியவை. நீங்கள் இதுவரை உங்கள் பிரதிக்கு சொல்லவில்லை என்றால் உங்கள் முகவரியுடன் சர்புதீனுக்கு ஒரு மெயில் அனுப்பவும். இதன் விபரங்களை அணுக இங்கு செல்லவும். 
ஆனாலும் அவருக்கு தைரியம் அதிகம்தான், எனக்கே போன் பண்ணி என்னுடைய படைப்பை அனுப்ப சொல்லி கேட்கிறார். வெள்ளிநிலாவின் வளர்ச்சியை மனதில் கொண்டு பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டேன்.

*************************************************************************
 காலை நேரம் அனைத்து தொலைகாட்சியிலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் விளம்பர நிகழ்ச்சிகள் நடக்கும். சித்த வைத்தியம், யுனானி, காது கேட்பதற்கு சிகிச்சை, மந்திர எந்திர தாயத்து விற்பனை, முடியாமைக்கு சிகிச்சை, முடவர்கள் நடக்கிறார்கள். பொழுது போகாமல் இருந்தால் இந்த நிகழ்ச்சியை பார்த்தீர்களானால் நல்ல நகைச்சுவையாக பொழுது போகும். இதில் ஒருவர் சிதம்பர ரகசியத்தை சாப்ட்வேராக விற்கிறார். அவர் குடுக்கும் உலோகத்தை உங்கள் அருகில் வைத்திருந்தால் உங்கள் உடல் சக்கரங்கள் ஒழுங்காக சுத்துமாம். நல்லா சுத்துறாங்க. விருப்பம் இருந்தால் முயற்சிக்கவும்.
*************************************************************************
 அந்த பெரியவருக்கு புகழ்ச்சி என்றால் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த வயதிலும் நீண்ட நேரம் உட்கார்ந்து நடிகைகள் தங்கள் இடுப்பு மற்றும் இன்ன பிற அங்கங்களை அசைப்பதை ஆனந்தமாக பார்கிறார். இது ஏதாவது மன வியாதியா என்று நம்ம மனநல மருத்துவர் பதிவர் தான் சொல்ல வேண்டும். எப்படியும் ஒரு அய்நூறு பாராட்டு விழாவது நடந்திருக்கும். அதிக பாராட்டு விழா கண்டவர் என்று யாரவது பாராட்டு விழா எடுக்காம இருந்தா சரி. 

*************************************************************************

தமிழ்மணம் முகப்பில் தெரிய நாலு வோட்டில் இருந்து ஏழு வோட்டாக மாற்றிவிட்டது. நாலு வோட்டு கிடைக்கவே நாய் படாத பாடு படவேண்டி இருந்தது.இப்ப ஏழு வோட்டு வேற. ஏழுகொண்டலவாடா நீதான் என்னைபோல இளைய பதிவர்களை காப்பாற்ற வேண்டும். நான் பிரபலமானால் புதிய பதிவர்களை மொக்கை என்றோ அவர்கள் எழுதுவதை குப்பை என்றோ கூறமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.

*************************************************************************

Wednesday, February 10, 2010

காதலர் தினம் - சிறப்பு பதிவு

காதலிக்கும் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

நாங்கெல்லாம் வருஷம் பூரா காதலிப்போம், எங்களுக்கு  எதுக்கு தனியா ஒரு நாளு. சொன்னா யாருக்காவது புரியுதா. இந்த வியாபாரிங்கதான் வாழ்த்து அட்டைய விக்கணும் பூவ விக்கணும், பொம்மைய விக்கனும்னு எதையாவது கிளப்பி விடுறாங்கன்னா இந்த பதிவர்கள் வேற சீசன் பதிவு போடுறாங்க.தவிர அந்தந்த சீசனுக்கு உண்டான பதிவு போடலைனா தமிழ்நாட்டை விட்டே தள்ளி வச்ருவாங்க போலிருக்கு.காதல் புதிரா, காதல் புனிதமா, காதல் சமூக அறிவியலா, காதல் கவிதையா எல்லா தலைப்பிலும் பலர்  பதிவு எழுதி ஆச்சு.  இதுல ஒரு பதிவர் (ஷங்கர் அல்ல ) எனக்கு கால் பண்ணி, காதலர் தினத்துக்கு நான் ஒரு கவிதை எழுதி வச்சுருக்கேன் அத போஸ்ட் பண்ண போறேன் அன்னிக்கு நீங்க என்ன போஸ்ட் பண்றீங்கன்னு கேட்டார். நமக்கு அந்த கவிதை கண்றாவிதான் வர மாட்டேங்குது. அதனால சும்மா சிரிச்சு வச்சேன்.எனக்கு தெரிஞ்சு காதல பத்தி அருமையா ஒரு நாட்டுப்புறப்பாட்டு இருக்கு. என்ன, கல்யாணத்திற்கு பிறகு மனைவி ஆனவள் என்னவெல்லாம் செய்யணும்னு காதலன் காதலிக்கு பாட்டின் மூலமா குறிப்பு எடுத்து கொடுப்பான். இந்த ப்ளாக்கிற்கு வாசகிகள் எண்ணிக்கை (யாருப்பா அது) அதிகம் இருப்பதால் இங்கே போஸ்ட் பண்ண முடியாது. தேவை ஆனவர்கள் தனியாக மெயில் அனுப்பவும்.(மெயில்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வசூலிக்கிறதா வேண்டாமான்னு முடிவு செய்வேன்).

சரி நாம காதலிச்ச கதைய போடலாம்னா, வீட்ல பொஞ்சாதி இத படிக்கறதோட இல்லாம   என் ஊட்டுக்காரர் நெட்ல எழுதுறாரு நெட்ல எழுதுறாருன்னு, சொக்காரங்களுக்கு எல்லாம் கூவி கூவி சொல்லி ஆச்சு.அதனால அத எழுதி என்ன யோக்கியன்னு நம்பிகிட்டு இருக்குற பயபுள்ளைக நினைப்புல சாண்ட் அள்ளி போட விரும்பலை.

ஆகவே மகா ஜனங்களே நல்லா காதலியுங்க.. காதலிக்கிற கொஞ்ச காலம் மட்டும்தான் உங்களால சந்தோசமா இருக்க முடியும். அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்ன சொல்றார்னா, பொண்ணுங்க கல்யாணம் பண்ணும் பொழுது கல்யாணத்திற்கு பிறகு காதலன் மாறிடுவான்னு நினைப்பாங்கலாம் . அதே பசங்க கல்யாணம் பண்ணும் பொழுது கல்யாணத்திற்கு பிறகு காதலி மாறாம அப்படியே இருப்பான்னு  நினைப்பாங்கலாம்.ஆனா ரெண்டு பேரு நினைப்பிலேயும் தண்ணி லாரி ஏறுமாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. வந்து எங்க ஜோதில ஐய்கியமாகுங்க.விட்டில் பூச்சிகளாய்...

காதலி கிடைக்காத வாலிப வயோதிக அன்பர்களே, அம்மாகிட்ட மம்மு வாங்கி சாப்டுட்டு,  கூகுளில் "valentine's day coloring pages for kids" அப்படின்னு டைப் பண்ணா கீழே உள்ள மாதிரி நிறைய படம் வரும்.அப்பா உதவியுடன் அத பிரிண்ட் அவுட் எடுத்து நல்லா கலர் பண்ணுங்க. சமத்தா கலர் பண்ணி மறுபடியும் அம்மாகிட்ட மம்மு வாங்கி சாப்பிட்டு படுத்து தூங்குங்க.  ங்கா...

பின் குறிப்பு :- 
இந்த சிறப்பு பதிவு முடிஞ்சது. அடுத்த சிறப்பு பதிவு மார்ச் மாசம் ஹோலி வருதாம்ல. அப்ப பாப்போம். பிப்ரவரி பதினாலுக்குதான் இன்னும் அஞ்சு நாள் இருக்கே, அதுக்குள்ள என்ன அவசரம்னு நீங்க கேக்கிறது புரியுது. வலது பக்கம் மேல பாருங்க. உங்களுக்கே புரியும்.இனிமே கேப்பீங்க?!?!. 
லேபிளுக்கும் பதிவுக்கும் நோ கனக்சன்.நல்லா இருங்க மக்கா.


Wednesday, February 3, 2010

எனது முதல் கவிதை (மாதிரி).....

 கர்ம யோகி:-
பிரம்ம மூர்த்தத்தில்
விழித்தெழு
ஆசனத்தில் உடம்பை 
வளர் 
பிராணாயாமத்தில் 
தேர்ச்சி பெறு
பிரமச்சர்யத்தை 
கைக் கொள்
மனம் அடக்கி 
த்யானத்தில் அமர்
குண்டலினியை 
குதித்து எழச்செய்.
முக்திக்கு முன்னூறு 
வழிகள் இருக்க
சாப்பிடும்போது  புரை ஏறிய
மனைவிக்கு ஓடிச்சென்று 
தண்ணீர் எடுத்து தருவது 
எளிமையாய் இருக்கிறது.


பின்குறிப்பு :- கவிஞர் மற்றும் நண்பர் பலாபட்டறை ஷங்கருக்கு dedicate பண்ணிக்கிறேன். (அதிகம் மியூசிக் சேனல் பார்ப்பதால் வந்த பழக்கம்)

எல்லாத்திலையும் கை வச்சு இப்ப கவிதைலையும் வாய வச்சாச்சு. நீங்க எவ்வளவோ தாங்கிடீங்க, இதையும் தாங்குங்க.


**********************************

Monday, February 1, 2010

பரதேசியின் கதை..

(படத்தில் இருக்கும் பலா சங்கர் வெறும் மாடலே. அவருக்கும் தலைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை)

தமிழ் நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றியுள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர் பட்டினத்தார். சென்னையில் இருப்பவர்களுக்கே நிறைய பேருக்கு இவரின் சமாதி சென்னையில் திருவெற்றியூரில் அமைந்திருப்பது தெரியாது. கடலை ஓட்டி அமைந்துள்ள சாலையில் கடலை பார்த்தபடி இருக்கிறார் பட்டினத்தார். இவரின் இயற்பெயர் திருவென்காடார்.

செல்வ செழிப்புமிக்க வணிக குடும்பத்தில் பிறந்தவர். மனைவி பெயர் சிவகலை. இருவருக்கும் குழந்தை இல்லாமல் இறைவனை வேண்ட, சிவ பக்தர் ஒருவர் கோயிலில் கண்டு எடுத்ததாக கூறி ஒரு குழந்தையை இவர்களிடம் ஒப்படைக்கிறார். ஆசையோடு வளர்த்த குழந்தை இளைஞன் ஆகி கடல் கடந்து பொருள் ஈட்ட செல்கிறான். அவன் வரும்பொழுது வெறும் எரு வரட்டி மூடை மூடையாக கொண்டு வருகிறான். திருவென்காடார் அவனை திட்டி அனுப்பி விடுகிறார். வீட்டிற்கு வந்தால் பையன் அவன் அம்மாவிடம் கொடுத்த ஒரு சிறு பெட்டி இருக்கிறது. உள்ளே ஒரு உடைந்த ஊசியும், பிறப்பிலிருந்து ஓலையும் இருக்கிறது. ஓலையில் " காதற்ற ஊசியும் வாராது கான் கடைவழிக்கே" என்று எழுதப்பட்டுள்ளது.

இயற்கையின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியாத இடம் இதுதான். செல்வ சிறப்புமிக்க வணிக குடும்பத்தில் பிறந்தவர் கண்டிப்பாக இதைவிட பெரும் தத்துவங்களை படித்திருப்பார். ஆனால் அவருடைய "ப்ரேகிங் பாயிண்ட் " இருந்தது அந்த ஒத்தை வரியில்.எல்லா சுகங்களையும் குடுத்து பின் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டால் ஒரு அதிர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் தகுதி இருந்தும் வழிக்கு வராத சிஷ்யனை ஒரு குரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தே தேடலுக்கு வழி வகுப்பார். இங்கே இறைவன் அந்த வேலையை செய்தார் . கடைசி அடியாக அந்த ஒத்தை வரி.ஞானம் பிறந்தது. துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பரதேசி ஆகிவிடுகிறார். தேடல் ஆரம்பித்தது.

பரதேசியான தம்பியை கண்டு அவமானம் அடைந்த சகோதரி அப்பதில் விஷம் கலந்து குடுகிறாள். . "தன் வினை தன்னைச்சுடும், வீட்டப்பம் ஓட்டை சுடும்" என்று கூறி அப்பத்தை கூரையில் எறிய, அந்த வீடு தீப்பிடித்து
எரிகிறது.

தகுதி உள்ள சீடன், தன் குருவை எப்படியேனும் அடைந்தே தீருவான். உங்களுக்கான நேரம் வரும் பொழுது உங்கள் குரு உங்கள் முன் தோன்றுவார், எவ்வடிவதிலும். இயற்கை இடும் இந்த புதிரையும் புரிந்து கொள்வது கடினம். நுட்பமானது. அரசியின் நகையை திருடியதாக கைது செய்யப்பட்டு அரசன் முன் நிறுத்தப்படுகிறார் பட்டினத்தார். அவரை கழு மரத்தில் ஏற்ற சொல்கிறான் அரசன். மரம் தீபிடித்து எரிகிறது. அரசன் தன் குருவை கண்டுகொண்டான். குரு சீடன் சந்திப்புக்கு அங்கே அரசியின் நகை களவு ஒரு மீடியம், அவ்வளவுதான். பின்பு அந்த அரசன் பத்ரகிரியார் ஆகி, தன் குருவையே மிஞ்சும் சீடன் ஆகிறான்.
(இவரின் கதையை தனி பதிவாக இடலாம்).

குருவுக்கு முன்பே சீடன் முக்தி அடைந்துவிட, பட்டினத்தார் ஊர் ஊராக சுற்றுகிறார் . இடையில் அவரின் அன்னை மரண படுக்கையில் இருக்கும் சேதி கேட்டு அவரை காண வருகிறார். இந்நாட்டில் அன்னைக்கு இருக்கும் மரியாதை போல் வேறு எங்கும் இல்லை. முற்றும் துறந்த முனிவரான ஆதி சங்கரர் ஆனாலும் பரதேசியான பட்டினத்தார் ஆனாலும் அல்லது சம கால ஞானியான ரமண மகரிஷி ஆனாலும் தன் அன்னைக்கே முதலிடம் அளித்து உள்ளார்கள்.
இப்பொழுது இங்கேதான் முதியோர் இல்லமும் அதிகரிக்கிறது.

மரணித்துவிட்ட அன்னையை கண்டு அழுது புலம்பி பட்டினத்தார் இயற்றிய பாடல்கள் தமிழும், கடைசி அன்னையும் மக்களும் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும்.


ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்


முக்திக்காக ஏங்கி திரியும் பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனிக்கும் இடத்தில முக்தி கிடைக்கும் என்று இறை சக்தியால் உணர்த்தப்படுகிறது. கரும்பில் பேய் கரும்பு என்ற வகை இனிப்பட்றது . திருவற்றியூர் வந்த இடத்தில பேய் கரும்பு இனிக்கிறது.

இந்த இடத்தில தான் தன் உடம்பை விட வேண்டும் என்று அவருக்கு புரிகிறது.
ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி என்றழைகப்படும். கபீர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன. ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணமலையில் மறைந்தது. போலவே பிரம்பு கூடைக்குள் புகுந்து கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டிய பட்டினத்தார் அந்த கூடை குள்ளிருந்தே மறைந்து போனார். அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் இருந்த இடத்தில ஒரு சிவ லிங்கம் இருந்தது. அதுவே திருவெற்றியூரில் இருக்கும் பட்டினத்தார் கோயில்.


பின் குறிப்பு: - அய்நூறு ஆண்டு கால பழமை வாய்ந்தது. சென்னையில் இருப்பவர்கள் ஒரு முறை சென்று வாருங்கள். யோகா சாதனையில் ஈடு பட்டிருப்பவர்கள் சென்று தியானம் செய்ய உற்ற இடம். அங்கே உள்ள நல்ல அதிர்வுகள் உங்களை இலகுவாக உங்களுடன் ஒன்ற செய்யும்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை பட்டினத்தார் பாடல் கீழே.





******************************************************************************************