Thursday, January 28, 2010

சின்ன சின்ன... 28-1-10

பூர்த்தி செய்யப்படாத தலைப்பு. ஒரு படைப்பாளி ஒரு பிரதியை படைக்கும்பொழுது சிலவற்றை ஒரு வாசகனின் யூகத்திற்கே விட்டுவிடுகின்றான். ஒன்றும் புரியாமல் வாசகன் திகைக்கும் பொழுது அந்த பிரதி காலங்களை கடந்து அமரத்துவம் பெற்று விடுகிறது. பிரதியை படைத்தவனும்...........
(இதுக்கு முதல்ல டிட்பிட்ஸ் என்று தலைப்பிட்டு இருந்தேன். அடக்கமாட்டாத தமிழ் ஆர்வத்தால் சின்ன சின்ன..)

*************************************************************************************
போன வாரம் எங்கள் அப்பார்ட்மெண்டில் வீடு வீடாக ஒரு கார்டு விநியோகித்து கொண்டிருந்தார்கள். அது கேகே நகர் பஸ் டிப்போ அருகில் உள்ள மருத்துவமனையின் விளம்பர அட்டை. சர்க்கரை நோய், மூட்டுவலி, எலும்பு முறிவுக்கு சிறப்பாக சிகிச்சை அளி பார்கலாம். இதில் கவனிக்க வேண்டியது, அந்த கார்டை அவர்களிடம் சிகிச்சைக்கு வரும் பொழுது கொண்டு வந்தால் 25 சதவீதம் தள்ளுபடி உண்டாம்.மருத்துவத்தில் விளம்பரம் செய்யகூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். விரைவில் ஆடிக்கழிவு மற்றும் எக்ஸ்பயரி ஆகும் மருந்துகளின் clearence சேல் எதிர்பார்க்கலாம். எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு நாலு கார்டு வாங்கி வச்சிருக்கேன். தேவை படுபவர்கள் எனக்கு மெயில் செய்யவும். இல்லையேல் நாலு கார்டையும் எடுத்திட்டு போய் 100 சதவீதம் தள்ளுபடி உண்டானு கேக்கணும்.

*************************************************************************************
சென்னை சங்கமம் வீட்டுக்கு அருகில் உள்ள பார்க்கில் நடந்தது. தினமும் சென்று வந்தேன். அஞ்சு வயசு பொண்ணு அசால்டா சிலம்பு சுத்துச்சு. பலத்த கரகோஷம் எழும்ப அந்த சின்னஞ்சிறு முகத்தில் அவ்வளவு சந்தோசம். நீண்ட நாட்களுக்கு அந்த முகமே நினைவில் நின்றது. சில கலைஞர்களிடமும் பேசினேன். அறிவிப்பாளர் போன வருடத்தின் சென்னை சங்கமம் சீடீ விற்பனைக்கு என்று அறிவித்தார். அம்பது ரூபாய் குடுத்து வாங்கினேன். நேற்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது. கவரில் சங்கமம் 2009 நிகழ்வுகள் அனைத்தும் என்று பிரிண்ட் செய்யப்படிருந்தது. போன வருடம் கலைஞர் டிவி ஒளிப்பரப்பிய ஒரு நாள் சங்கமம் மட்டுமே இருந்தது, கலைஞர் டிவி வாட்டர் மார்க் மற்றும் லோகோவுடன்.நோ கமெண்ட்ஸ்

*************************************************************************************
இரண்டு பேருமே என்னை விரும்புறாங்க, நான் என்ன முடிவு எடுக்கிறது. நான் சொல்றேன் வலது பக்கம்தான் மச்சம் இருக்கு, நீதான் ஏன் பேரன். ஏன்னெனில் காம்ப்ளானில் மட்டுமே உள்ளது இரட்டிப்பு ஊட்டசத்து. தண்ணிலையே பொழப்பு நடத்துறீங்க, தண்ணிய பார்த்து ஏன் பயப்படறீங்க. பாதி முதுகு சரியான மாதிரி இருக்கு. ஓடிபோலாமா.நடிகர் கார்த்திக் பங்கேற்கும் ஸ்டார் டாக். முடி உதிர்வது பிரச்சினை. வெங்காயத்தை சிறியதாக நறுக்கவும். ராஜபக்ஷே வெற்றி பெற்றார். அவள நான் பழி வாங்கியே ஆகணும். எங்கே செல்லும் இந்த பாதை. இந்த விசமில்லாத பாம்புதான் இன்னைக்கு எனக்கு உணவு. குறைந்த உடையில் பூனை நடை.நேத்து வார விடுமுறை. வெட்டியா உட்கார்ந்து சேனல் மாத்தினதுள்ள குறிப்பு எடுத்தது. ஏன் கடைசில அந்த சேனல்ல நிறுதிட்டீங்கன்னு கேட்டு யாரும் கமெண்ட் போடகூடாது.
*************************************************************************************
நிறைய இடங்களில் தியேட்டரை விட்டு தூக்கிய பிறகும் சன்னில் இன்னும் வேட்டைகாரனுக்கு ட்ரைலர் ஓட்டி கொண்டிருக்கிறார்கள். சன் ஆரம்பிச்சு வச்சது, நொடிக்கு நூறு தரம் ட்ரைலர் காண்பிப்பது. இப்ப அறிமுக நாயகன் குமரன் நடிக்கும் தைரியம், எல்லா சேனல்லையும் நொடிக்கு முந்நூறு தரம் ஓடுது. அந்த ட்ரைலரின் முடிவில் வில்லன் வெறித்தனமா கமான் கமான்னு நம்மள தியேட்டருக்கு கூப்பிடறுது பீதிய கிளப்புது.இந்த படத்துடன் , நாளை கோவா மற்றும் தமிழ் படம் ரிலீஸ் ஆகுது. என்னோட சாய்ஸ் தமிழ் படம்.

*************************************************************************************
நேற்று வந்த சம்ஸ்.
1 sal 12 mah 1 mahk 4 hfte 1 hftek 7 din 1 dink 24 ghnte 1 ghntek 60 minut 1 minutk 60 sec 1 sec hzarlmhehrlmhe me 1 hi
Aap KHUSH RAHO?
கொஞ்ச நேரம் கழிச்சு அதுக்கு அர்த்தம் என்று அடுத்த sms.
1 year 12 months 4 weeks 7 days in a week a day in a week 24 hours in a day an hour in a day 60 mins in a hour 1 min in a hour..
Be happy always.
என் பதிவை எல்லாம் படிக்கிறீங்க. கண்டிப்பா சந்தோசமாத்தான் இருப்பீங்க.:))


**********************************************************************************


Monday, January 25, 2010

சாலையோரம் - தொடர் இடுகை..


இது ஒரு தொடர் இடுகை... அழைத்த விதூஷ் வித்யாவிற்கு நன்றி. இதே தலைப்பில் உள்ள பிறரின் இடுகைகள் இங்கே.

வித்யா
பலாபட்டறை
சந்தனமுல்லை
தீபா
சங்கவி

பத்து வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த புதிதில் நான் வேலை பார்த்தது ஜெராக்ஸ் மெசின் சர்வீஸ் எஞ்சினியராக. என்னுடன் சேர்த்து அந்நிறுவனத்தில் ஒரு இருபது பேர் எஞ்சினியராக வேலை பார்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் சென்னை ஏரியாவை பிரித்து கொடுத்திருந்தார்கள். எனக்கு தலைமை செயலகம் மற்றும் எழிலகம் பகுதி. இதற்கு பக்கத்து ஏரியா எஞ்சினியரின் ஒத்துழைப்பும் தேவை. என்றாவது நான் விடுமுறை எடுத்தால், அவர் என்னுடைய பகுதியையும் சேர்த்து பார்த்து கொள்வார். இப்படிதான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது. அவன் பெயர் சுந்தர். திருவல்லிக்கேணி பகுதி எஞ்சினீயர். இருவரும் சேர்ந்து சுத்தாத இடம் இல்லை. அடிக்காத பீர் இல்லை. வேலை முடிந்ததும் பைக்கை நேரே கொண்டு போய் ஸ்டெல்லா மாரிஸ் காலஜ் முன்னாடி நிறுத்தி அடிக்காத சைட்டு இல்லை. குடியும் கூத்துமாய் இருந்த வேலையில் சுந்தர் காதல் வயப்பட்டான். உங்களுக்கே தெரியும், ஒவ்வொரு ஜெராக்ஸ் கடையிலும் வயசு பெண்கள் இருக்ககூடிய சாத்தியகூறுகள் அதிகம். அப்படி ஒரு கடையில் இருந்த பெண்ணின் மேல் காதல்.ஆனால் சொல்ல தயக்கம். தண்ணி அடித்தால் புலம்பல் அதிகமாகிவிடும். நாளைக்கு எப்படியும் சொல்லிடுவேண்டா, என்பான். ஆனால் அது நிகழ்ந்ததே இல்லை. அந்த பெண்ணுக்கும் இவன் மேல் காதல் இருந்திருக்கக்கூடும். சில சமயம் அந்த பெண் வேலை பார்த்த ஜெராக்ஸ் மசினில் பிரச்சினை என்று பேஜர் ஒலிக்கும். வேண்டுமென்றே நான் போய் நிற்பேன். பிரச்சினை எதுவும் இருக்காது. அவர் வரலீங்களா என்று கேட்டு தலையை குனிந்து கொள்வாள். இந்த கண்ணாமூச்சி நீண்ட நாட்களுக்கு நீடித்தது. நான் சுந்தரிடம் அடிக்காத குறையாக சொல்ல சொல்லி வற்புறுத்த, சரிடா இந்த தீபாவளிக்கு ஊருக்கு போய்ட்டு வந்து கண்டிப்பா அவகிட்ட சொல்றேன். என்ன ஆனாலும் சரி, என்றான். நாளைக்கு மெசேஜ் அனுப்புவேன். என்னைய கொண்டு போய் ஸ்டேசன்ல விடனும். இந்த தடவை வீட்ல எல்லாருக்கும் டிரஸ் எடுத்திருக்கேன். மறக்காம நாளைக்கு வந்திரு. ஆனால் அடுத்த நாள் எனக்கு வாடிக்கையாளர்கள் அழைப்பு அதிகம் இருந்ததால் நான் போகவில்லை.

இரவு ஏழு மணிக்கு அலுவலகத்தில் இருந்து பேஜர் மெசேஜ். sundar met with an accident. seriously injured.admitted in KMC.அரசு பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்திருந்ததால் அரசாங்கம் தனியார் ஓட்டுனர்களை வைத்து பேருந்தை இயக்கிய நேரம் அது. ஹோட்டல் தாசப்ரகாஷ் தாண்டி, எக்மோருக்கு திரும்பும் மேம்பாலம் அருகே சுந்தரின் வாழ்வு சிதைக்கப்பட்டது. பைக்கை ஓட்டிச்சென்ற மற்றொரு நண்பருக்கு எந்த காயமும் இல்லை. ஆனா சுந்தருக்கு தலை பிளந்து விட்டது.

தலையில் பலமாக அடிபட்டதால் சுந்தர் கோமா நிலைக்கு சென்றுவிட்டான். அறை குறை உயிரோடு இருந்த அவன் உடலை வைத்து கே யம் சீயில் நிகழ்ந்த
பணப்பிடுங்கல்கள், காவல் நிலையத்தின் மூலம் தகவல் அறிந்து இந்த விபத்தை கேஸ் போட்டு காசாக்க நினைத்த தேங்காய் மூடி வக்கீல்கள், இவர்களை பற்றி தனியாக எழுதலாம். பின்பு அவனை வடபழனி விஜயா மருத்துவமனைக்கு மாற்றினார்கள். சில அறுவை சிகிச்சைக்கு பிறகு அவனை ஊருக்கு தூக்கி போனார்கள்.விபத்தை அருகில் இருந்து பார்தததினால் அதிர்ச்சி அடைந்த, பைக் ஓட்டிச்சென்ற நண்பருக்கு மன நல சிகிச்சை அளிக்கப்பட்டது. சுந்தர், ஏறக்குறைய பத்து மாத கோமாவிற்கு பிறகு அவனுக்கு நினைவு வந்தது. ஒரு வருடம் கழித்து, சிகிச்சைக்காக அவனை சென்னை கூட்டி வந்திருந்தார்கள். சில விசயங்கள் தவிர எதுவும் அவனுக்கு நினைவில்லை. விபத்தில் இழந்திருந்த முன் பற்கள், நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்ததினால் குண்டாகி இருந்த அவன் உடல் அவனை அடையாளம் தெரியாமல் மாற்றி இருந்தது. அவன் அம்மா என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைக்க முயற்சித்தார்கள். என்னை தெரிந்த மாதிரி சிரித்து வைத்தான். அவன் கண்கள் எதையோ தேடுவதை போல அலைபாய்ந்து கொண்டிருந்தது. நான் சொன்ன நிறைய விஷயங்கள் அவன் நினைவுக்கு வரவே இல்லை. இதற்கு அவன் பேசாமல் இறந்திருக்கலாம் என்று நினைத்தேன். அடுத்த நாள் அவர்கள் ஊருக்கு போவதாய் கால் வந்தது. கண்டிப்பாக ஸ்டேஷன் வருகிறேன் என்று கூறி போகவில்லை.

அலுவலகத்தில் மாற்றல் வாங்கி வேறு பகுதிக்கு சென்று விட்டேன். அந்த பெண்ணையும் இன்று வரை சந்திக்கவே இல்லை.

பின் குறிப்பு : -

இதுவரை தொடர் இடுகை எழுதிய அனைவரும் சாலையில் அவர்கள் சந்தித்த, கேள்விப்பட்ட விபத்தை பற்றி எழுதி உள்ளார்கள்.கவனமாக இருக்க சொல்லி அறிவுறுத்துகிறார்கள். நான் எந்த அறிவுரையும் கூற போவதில்லை. காரணம் முதலாவதாக,நீங்கள் எப்படியும் அதை பின்பற்றபோவதில்லை, இரண்டாவது அனுபவங்கள் தரும் அறிவுரைதான் (சற்றே முகத்தில் அறைந்து கூறினாலும்) புரிய வைக்கும். நீண்ட வருடங்களாக என்னுள் இருந்த சம்பவம் தோழி வித்யாவின் அழைப்பால் இறக்கி வைத்துள்ளேன். அவருக்கு என் நன்றிகள் பல.
சுந்தர் பெயர் மாற்றப்பட்டுள்ளது.






********************************************************************************

Thursday, January 21, 2010

எழுத்தாளர் ஜெயமோகன்தான் காரணம்....

(படம் : பலா சங்கர்)

நேற்று சுவாமி ஓம்கார் சென்னைக்கு விஜயம் செய்தார். காந்தி சிலைக்கு அருகில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. வயதான ஒருவர், கதர் குல்லாய் போட்டிருந்தார். ஒருவனை கையை பிடித்து,பேரனாய் இருக்க வேண்டும், தள்ளாடி நடந்து வந்து காந்தியை பார்த்து கைகூப்பியபடி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார். தீவிர காந்தியவாதியாய் இருக்கும். போகும்பொழுது காந்தியை திரும்பி திரும்பி பார்த்தப்படி சென்றார். அவர் என்ன நினைத்திருப்பார் என்றே யோசித்து கொண்டிருந்ததால், பள்ளி சீருடையில் ஒருவன் கரம் பிடித்து நடந்த பெண், இறுக்கமான உடை அணிந்து காதலன் தோளில் சாய்ந்துகொண்டிருக்கும் பெண், சிரித்தபடி நடந்து கொண்டிருந்த கல்லூரிப்பெண்கள். இவர்களை பார்க்கவில்லை.

சரியாக ஆறு மணிக்கு சுவாமி ஓம்கார் அண்ணன் அப்துல்லாவுடன் வந்து சேர்ந்தார். சுத்தி நாலு பேரு நின்னுகிட்டு, சாமி வராரு வழி விடுங்க வழி விடுங்கன்னு சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா சுவாமி ஓம்கார் ரெம்ப எளிமையா இருந்தார். அவரு ரெம்ப சிம்பிளா இருந்தாருன்னு நிறைய பேரு கேட்டாங்க.எந்த அளவுக்கு எளிமைனா அவரு ஒரே ஒரு பைஜாமா ஒரே ஒரு குர்தாதான் போட்ருந்தாரு, அந்த அளவுக்கு எளிமை. சிறு அறிமுகத்திற்கு பிறகு உட்கார்ந்து பேச இடம் தேடினோம். அருகில் ஒரு குழந்தை ஓடி வந்து சிரித்தது. பலாபட்டறை சங்கர், அது உங்களை பார்த்துதான் சிரிக்குது என்றார். அவரு குழந்தையை சொன்னாரா இல்ல அந்த குழந்தைக்கு அருகில் நின்றிருந்த இளம் பெண்ணை பற்றி சொன்னாரா என்று தெரியவில்லை. கேட்டால் என்னத்த கண்ணையா மாதிரி "நான் பொதுவா சொன்னேன்" என்றார்.

துளசி கோபால் எனக்கு பிறகு வந்து, பதிவர்களை காணாமல் ஜெட்லி சங்கருக்கு போன் செய்திருக்கிறார். சங்கர் எனது போன் நம்பரை குடுக்காமல், எறும்பு அங்கதான் நிக்கிறாரு பாருங்கன்னு சொல்லிருக்கிறார். பின்பு துளசி டீச்சர் என்னிடம், நீங்கதான் எறும்பான்னு நான் யாருகிட்ட போய் கேக்க முடியும் நீங்களே சொல்லுங்க என்றார், அப்பாவியாய்.அந்த காட்சியை நினைத்து பார்க்கவே சிரிப்பு வந்தது. நல்ல வேளை இவங்க பதிவர் பைத்தியகாரனை தேடலை.

தேடி இடம் பிடித்து மணலில் உட்கார்ந்த பிறகு கச்சேரி களை கட்டியது. எப்படி எழுத வந்திங்க என்று சுவாமி ஒம்காரை கேட்டதற்கு, எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை பதஞ்சலி யோகா சூத்திரம் பற்றி எழுதி இருந்தார். தலைப்ப மட்டும் பதஞ்சலி பேர போட்டுட்டு முழுசும் அவர் கருத்த எழுதி இருந்தாரு.( சுவாமிய போட்டு குடுத்தாச்சு ). அதில் எனக்கு உடன்பாடு இல்லாததனால அதுக்கு மறுப்பு தெரிவிச்சு பதஞ்சலி யோகா சூத்திரத்தில் இருந்து மேற்கோள் காட்டி ஒரு அஞ்சு பக்கத்துக்கு கடிதம் எழுதினேன். ஜெயமோகன் கிட்ட இருந்து ரெண்டே வரில, உங்கள் கருத்துக்கள் நன்றாக இருந்தது என்று பதில் வந்தது. இதை ஏன் நீங்களே ஒரு வலைத்தளம் ஆரம்பிச்சு உங்க கருத்த சொல்லகூடாதுன்னு கேட்டிருந்தாரு. அதுல ஆரம்பிச்சதுதான் இந்த வலை தளம் என்றார்.ஆகவே சுவாமி ஓம்கார் எழுத வந்ததற்கு எழுத்தாளர் ஜெயமோகன் தான் காரணம் (பதிவு தலைப்பு). நான் ரெம்ப சீரியஸா, சாமி நீங்க ஜெய மோகனுக்கு எழுதுறதுக்கு பதிலா சாருக்கு இதே மாதிரி எழுதி இருந்தீங்கன்னா, சீக்கிரமே பிரபலம் ஆகி இருபீங்கள்ள என்றேன். சில பதிவர்கள் சத்தமாக சிரிக்க, சிலர் நமுட்டு சிரிப்பு சிரித்தனர். நான் என்ன அப்படி தப்பா கேட்டுட்டேன்.ஏன் அவர யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்க!!!!

சூபி ஞானிகள்,சித்தர்கள்,காசி என நீண்ட பேச்சு புகைப்படத்தில் முடிந்தது.

வீட்டிற்கு போகும் வழியில் நல்ல பசி , அண்ணன் கேபிள் சங்கர் இங்க ஒரு சின்ன கடைல தோசை நல்லா இருக்கும்னு ஒரு தெருக்குள் கூட்டிட்டு போனார். அது ரெம்ப ரெம்ப சின்ன கடை போலிருக்கு, எங்க ரெண்டு பேரு கண்ணுக்கும் அது தட்டுபடலை. இங்கதான்யா இருந்துச்சு, ஒரு வேளை மூடிடாங்களோ,தெரியலையே என்றார்.

வழக்கமா சாப்டற கடைல சாப்ட்டு வீட்டை அடைந்தேன்... இன்னிக்கு சுவாமிய பார்த்ததால வீடுபேறு அடைந்தேன்.


பின் குறிப்பு:- அவரோட தனியா வேற புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.என்னிக்காவது சுவாமி ஓம்கார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஓம்கார் ஆகும் போது, அந்த படம் எனக்கு உபோயோகப்படும்.


*****************************************************************

Sunday, January 17, 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரை விமர்சனம் - Late than never


திரை விமர்சனம் இந்த படத்தை நான் பார்த்தது சத்யம் தியேட்டர்ல.


எங்க
ஊரு தியேட்டர்ல பாக்றதுக்கும் இங்க சத்யம்ல பாக்றதுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. ஊர்ல திரை, பெரும்பாலும் எங்கூர்ல வேட்டி துணியத்தான் சேத்து தச்சு திரையா கட்டிருப்பாங்க.அங்கங்க ஓட்டுகளுடன் கொஞ்சம் அழுக்காவே இருக்கும். ஆனா சத்யம்ல அப்படி இல்ல. நல்ல அகலமா பெரிசா சுத்தமா இருந்தது. கிட்டக்க போய் தொட்டு பாத்திருந்தா திரை என்ன மடீரியல்னு தெரிஞ்சுருக்கும். ஆனா நான் உட்கார்திருந்த இடத்திற்கும் திரைக்கும் ரெம்ப தூரம்கிறதால திரைக்கு பக்கத்துல போய் பாக்கல.


சில
தியேட்டர்ல திரைக்கு துணி கட்றதுக்கு பதிலா வெள்ளை பெயிண்ட் அடிபாங்கலாம். இதுகென்றே விசேசமான பெயிண்ட் கிடைக்குது.திரைகள் நிறைய வகைப்படும். தியேட்டரின் அளவை பொருத்து திரையின் அளவும் மாறுமாம். திரையின் அளவு பொதுவா 30ft திரை, 40 ft திரை, அப்புறம் 80ft திரை கூட உண்டாம்.


திரை
மட்டும் முக்கியம் இல்லைங்க, நாம உட்கார்ந்து பாக்கிற சீட்டுகள் கூட இடைவெளி சரியா இருக்கணுமாம். சீட்டிலிருந்து திரை 30 டிகிரிலேர்ந்து 80 டிகிரி கோணம் இருக்கணுமாம்.




அதுவும் சத்யதுல RDX அப்படீங்கிற டெக்னாலஜி பயன்படுத்துறாங்க. இதுக்கு Real digital experience னு பேரு. இந்த தொழில் நுட்பத்த பயன்படுத்தி நாம திரைல படம் பாக்குறப்ப, மற்றதை ஒப்பிடும்போது இதில் அதிக தெளிவுடன், அதிக வண்ணத்துடன், அதிக வெளிச்சமாக இருக்கும்.


மேலும்
சத்யம் நிறுவனம் என்ன சொல்றாங்கன்னா, ஒரு படத்தின் இயக்குனர் என்ன நினைத்து படத்தை எடுக்கிறாரோ அதே ஒலியுடன், அதே ஒளியுடன் ஒரு பார்வையாளனுக்கு அளிக்க முடியும்கிறாங்க.



ஆனால், செல்வா ராகவன் என்ன நினைத்து இந்த படத்தை எடுத்தார் என்று சத்தியமா இப்ப வரைக்கும் எனக்கு புரியல..





*****************************************************************************

பின் குறிப்பு : சினிமா விமர்சனம் எழுதினாதான் பதிவர்னு சொன்னாங்க, நான் ஒரு வித்தியாசத்துக்கு திரை விமர்சனம் எழுதி இருக்கேன். அப்பாடி நானும் பதிவர் ஆயிட்டேன். அடுத்து பிரபல பதிவர் ஆக முயற்சி செய்ய வேண்டும்.



*****************************************************************************